10, 12ம் வகுப்புக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 391 பள்ளிகள் திறப்பு

திண்டுக்கல், ஜன. 20:கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து தமிழக அரசு ஜன.19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.  திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 127 பள்ளிகள், பழநி கல்வி மாவட்டத்தில் 87 பள்ளிகள், வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் 70 பள்ளிகள், வத்தலக்குண்டு கல்வி மாவட்டத்தில் 107 பள்ளிகள் என மொத்தம் 391 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பத்தாம் பகுப்பில் 28, 619 மாணவ, மாணவிகளும், பன்னிரண்டாம் வகுப்பில் 22, 061 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். முன்னதாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சானிடைசர் கைகளில் போட்டும், வெப்பமானியை கொண்டு சோதனை செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளியில் பிரேயர் கூட்டம், விளையாட்டு- சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை. வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியே எங்கும் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. தண்ணீர் பாட்டில், சாப்பாடுவை குழுவாக பயன்படுத்தாமல் தனியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த சோப்பு வைக்கப்பட்டுள்ளது. மதிய உணவுக்கு பின்பு இரும்புச்சத்து, ஜிங்க் ஆகிய 2 சத்து மாத்திரைகள் என மொத்தம் 14,940 மாத்திரைகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் என 5 குழுக்களாக அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 10 மாதம் வீட்டிலே முடங்கியிருந்ததால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

Related Stories: