கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று பள்ளிகள் திறப்பு குமரி மாவட்டத்தில் 10, 12ம் வகுப்புகளில் 49 ஆயிரம் மாணவர்கள் வருகை தர ஏற்பாடு

நாகர்கோவில், ஜன.19: கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பள்ளிகள் இன்று (19ம் தேதி) திறக்கப்படுகின்ற நிலையில் குமரியில் 49 ஆயிரம் மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகை தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று (19ம் தேதி) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகங்கள் சுத்தப்படுத்துதல், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் மொத்தம் உயர்நிலை, மேல்நிலை என்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் என 487 பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 49 ஆயிரத்து 92 மாணவ மாணவியர் வகுப்புகளுக்கு வருகை தருகின்றனர். அனைத்து ஆசிரியர்களும் விடுதலின்றி பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் கபீர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது பள்ளிகளில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத நடவடிக்கைகள் தொடர்பாக பிளக்ஸ் போர்டுகள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு உறுதிப்படுத்தினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம் வாரியாக விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களும் நேற்றும் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகன் பேசினார். இதில் நாகர்கோவில் கல்வி மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு அறிவுரைகள் என்ன?

மாணவர்களுக்கு பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பான சுவரொட்டிகளில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வளாகத்திற்குள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முக கவசம் எப்போதும் அணியுங்கள். உடல் வெப்பநிலையை சோதனை செய்து கொள்ளுங்கள். அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தி கைகளை கழுவுங்கள், நண்பர்களுடன் கை குலுக்குவதை தவிருங்கள். முக கவசத்தை யாருக்கும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கைகளால் கை, மூக்கு, வாய் இவற்றை தொடாதீர்கள். பேனா, பென்சில், அழிப்பான், ஸ்கேல், மை, கணித உபகரணபெட்டி ஆகியவற்றை பரிமாறிக்கொள்ளாதீர்கள். அரசு வழங்கும் சத்து மற்றும் துத்தநாக மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். பள்ளி வளாகத்திற்குள் எச்சில் துப்பாதீர்கள். குப்பைகளை குப்பைதொட்டியில் மட்டும் போடுங்கள். கழிப்பிடங்களுக்கு சென்று வந்த பிறகு கைகளை கழுவுங்கள். மாணவர்கள் மதிய உணவை பகிர்ந்து கூட்டமாக அமர்ந்து உண்ணாதீர்கள். ஆய்வகங்களில் கிருமிநாசினியை பயன்படுத்தாதீர்கள் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: