வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்

சேலம், ஜன.20:சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில், 38 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தை அடுத்துள்ள மேட்டுப்பட்டி தாதனூர் முட்டைக்கடை காலனி பகுதியில் இருக்கும் சிலோன்காலனியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், திடீரென வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரவுண்டானா பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த உதவி கமிஷனர்கள் மணிகண்டன், நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் குமார், சரவணன் தலைமையிலான போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, 38 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா இதுவரை கொடுக்கவில்லை. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மறியலை கைவிட மாட்டோம் என பெண்கள் தெரிவித்தனர். உடனே மறியல் செய்தவர்களில் இருந்த ஆண்களை இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 30 பெண்கள் உள்பட 38 பேர் கைதாகினர். அவர்களை வேனில் ஏற்றி, தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டுச் சென்றனர். மறியல் செய்த பெண்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து 1982ம் ஆண்டு இந்தியா வந்தோம். 1984ல் எங்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கப்பட்டு, மேட்டுப்பட்டி தாதனூரில் 164 காலனி வீடுகள் கட்டித்தந்தனர். அங்கு 38 வருடமாக வசிக்கிறோம். ஆனால், எங்களுக்கு இன்னும் பட்டா தரவில்லை. கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சிலோன்காலனியில் மட்டும் 605 வாக்காளர்கள் இருக்கிறோம். ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சியினர் பட்டா தருவதாக கூறுகின்றனர். கடந்த முறை ஏற்காடு எம்எல்ஏ சித்ரா வாக்குறுதி தந்தார். ஆனால், இதுவரை வழங்கவில்லை. அதனால், இந்தமுறை எங்களுக்கு வீட்டுமனை பட்டா தராவிட்டால், தேர்தலை புறக்கணித்து யாரும் ஓட்டு போடமாட்டோம். கருப்பு கொடியேந்தி போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர். முன்னதாக போராட்டத்தின் போது, பெண்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன்கார்டு ஆகியவற்றை கையில் வைத்திருந்தனர். இந்த அடையாள அட்டைகள் இருந்தும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை என கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>