காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச விழா தேருக்கு சாரம் கட்டும் பணி மும்முரம்

ஆட்டையாம்பட்டி, ஜன.20: காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் வரும் 28ம்தேதி தைப்பூச தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக தேருக்கு சாரம் கட்டும் பணிகள் நேற்று துவங்கியது. சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், ஆண்டுதோறும் தைபூச தினத்தன்று தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தாண்டு தேர்த்திருவிழா நடைபெறுமா என்பதில் பக்தர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ், தேர்த்திருவிழாவை அரசின் கட்டுப்பாட்டு மற்றும் அரசின் ஆலோசனைப்படி நடத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து வரும் 28ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று கணபதி மற்றும் முருகன் சுவாமிகள் பவனி வரும் தேர்களுக்கு சாரம் கட்டும் பணி துவங்கியது. வரும் 24ம் தேதி கொடியேற்றமும், 27ம் தேதி சுவாமி திருக்கல்யாண வைபவமும், 28ம் தேதி மதியம் 3 மணிக்கு திருத்தேர்ரோட்டமும், 30ம் தேதி சத்தாபரண மகாமேரு நிகழ்ச்சியும் நடைபெறும் எனவும், தேர்த்திருவிழாவை காணவரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கோயில் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மற்றும் பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரியுமான சரஸ்வதி சதாசிவம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: