போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

சேலம், ஜன.20:சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு அரசுப்பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2,2 ஏ மற்றும் குரூப் 4 அடங்கிய பணிக்காலியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்படவுள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் 2 மீட்டருக்கு ஒருவர் என்ற இடைவெளியில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.  

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் நாளை (21ம் தேதி) காலை 10 மணியளவில் அலுவலக வளாகத்தில் நேரடியாக பயிற்சி வகுப்பு துவங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 0427-2401750 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: