×

மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 62 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், 62 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பெற்றோர் ஒப்புதலுடன் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களில், கிருஷ்ணகிரியில் 121 பள்ளிகள், மத்தூரில் 133 பள்ளிகள், ஓசூரில் 115 பள்ளிகள் மற்றும் தேன்கனிக்கோட்டையில் 70 பள்ளிகள் என 439 பள்ளிகளில் 29,731 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளும், 23,079 பிளஸ்2 மாணவர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதில், 10ம் வகுப்பில் 67 சதவீத மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 58 சதவீத மாணவ, மாணவிகள் என 62.05 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்திருந்தனர்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் வருகையை ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில திட்ட இயக்குனர் லதா, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மாநில திட்ட இயக்குனர் லதா கூறுகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு அதிகபட்சமாக 25 நபர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இணையவழி கல்வி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளியின் அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து, கிருமிநாசினி மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என 8 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. முன்னதாக, பள்ளிகளில் தூய்மை பணிகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்தது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேன் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் 20 முதல் 25 மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது.

Tags : Schools ,district ,school ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...