கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. இதற்காக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக எழுத்துத் தேர்வு நடக்கவில்லை. இதையடுத்து, நேர்முகத் தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நேர்முகத் தேர்வில் மண்டல இணைப் பதிவாளர் சந்தானம், துணைப் பதிவாளர்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், ராஜதுரை, சம்பத்குமார் மற்றும் சுந்தரம் ஆகியோர் பங்கேற்று நேர்முக தேர்வை நடத்தினர். 57 காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 115 பேர் கலந்து கொண்டனர். இதில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெற்றன.

Related Stories: