மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு தொகுப்பாக தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழ வகைகளை விளைவித்து பயன்பெறலாம். ஒரு தொகுப்பின் விலை ₹850. அரசு மானியம் ₹340 போக மீதம் ₹510 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இதில், 2 கிலோ எடையுள்ள தென்னை நார் கழிவு உரம், 6 பாலித்தீன் பைகள், முருங்கை, புஷ் பீன்ஸ், வெண்டை, அவரை, கத்திரி மற்றும் சுரைக்காய் ஆகிய விதை பாக்கெட்டுகள், உயிர் உரமான அசோஸ்பைரில்லாம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம், உயிரியல் பூச்சி கொல்லியான அசாடிரக்டின் 100 மி.லி, பூஞ்சாண கொல்லியான டிரைக்கோடெர்மா 200 கிராம் மற்றும் செயல் விளக்க நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இவற்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் பெறலாம். மாடித்தோட்ட தொகுப்பு தேவைப்படுவோர் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: