×

10மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாவட்டத்தில் 80 சதவீத மாணவர்கள் வருகை

தர்மபுரி, ஜன.20: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து உள்ளது. இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. பெற்றோர் சம்மதித்தால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்-லைன் மூலம் படிக்கலாம். பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரின் விருப்பப்படி கடிதத்துடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி பல்வேறு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஒவ்வொரு அறைக்கும் 25மாணவர்களை அமர வைக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் உள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 347உள்ளன. இதில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 28,718 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அரசின் உத்தரவுப்படி நேற்று முதல் பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் புத்தக பையுடன் உற்சாகத்துடன் வந்தனர்.

அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்ப நிலையை அறிய தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வந்தனர். மாணவர்கள் கூட்டமாக செல்வதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் ஒருங்கிணைப் படுத்திய பிறகே, பாடங்கள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 225ம், அரசு உதவிபெறும் பள்ளி 6ம் நேற்று திறக்கப்பட்டு விட்டது. சிபிஎஸ்சி-6, 104 மெட்ரிக் பள்ளிகளில் ஒருசில பள்ளிகள் திறக்கவில்லை. நேற்று 80சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர் என்றனர்.

Tags : district ,schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...