எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி அணை திட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 566 பேர் நிலம் தரவில்லை

தர்மபுரி, ஜன.20: எண்ணேகொல்புதூர் -தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வர, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 566பேர் இன்னும் நிலம் தரவில்லை என அமைச்சர் அன்பழன் தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் பேசினார். தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நகர வள்ளலார் திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்ஆர் வெற்றிவேல் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் அம்புஜம், குப்பண்ணா விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் தர்மபுரி மாவட்ட செயலாளரும், தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சருமான அன்பழகன் பேசியதாவது:அலியாளம் அணைக்கட்டில் இருந்து 8.8கிலோ மீட்டர் தூரத்தில் தூள்செட்டி ஏரி உள்ளது. அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு வருகின்ற வழியில் 12ஏரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவை. இந்த ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு ₹12கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இத்திட்டத்தை நிறைவேற்ற கையெழுத்திடவில்லை. ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு தேவை. தூள்செட்டி ஏரி தண்ணீரை கொண்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டு கூடிய விரைவில் இந்த திட்டத்திற்கு டெண்டர் வைக்கின்ற நிலையில் உள்ளது. அதற்காக ₹58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக ₹12 கோடியே 12லட்சம் அனுப்பப்பட்டு, கோட்டாட்சியர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தேர்வு செய்யப்பட்ட, 1233 ஏக்கர் நிலத்தில் 550ஏக்கர் நிலம் பட்டா நிலமாகும். இந்த நிலத்தை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இருப்பினும் காலதாமதத்தை தவிர்க்க முதலில் அரசு வசமுள்ள நிலத்தில், 1000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அலகு 1 அமைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணேகொல்புதூர் -தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வர தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்வர்கள் 76 பேர் நிலத்தை வழங்கிவிட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 566பேர் இன்னும் நிலம் தரவில்லை. அரூர் பகுதியில் குமரன் அணைக்கட்டு ₹4.50கோடி ஒதுக்கப்பட்டு அந்தப் பணி விரைவில் நடைபெற உள்ளது. நீர் மேலாண்மை திட்டம் மூலமாக வரத்து கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. 469 ஏரிகள் இன்று தூர்வாரப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பழகன் ேபசினார். இதில், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், விவசாய அணி தலைவர் டிஆர்.அன்பழகன், தொமு நாகராஜன், பொன்னுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: