பொன்னமராவதி,டிச,18: ஒலியமங்களம் சாலையை சீரமைக்க விவசாய தொழிலாளர் சங்க போராட்டம் தாசில்தார் உறுதியளித்த தால் கைவிடப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களத்தில் உள்ள வௌ;ளாளப்பட்டி கிறிஸ்துவ தெருவிற்கு உடைந்து போன பழைய பாலத்தை சரி செய்யாமலேயே அமைக்கப்படும் சாலை பணியை கண்டித்தும், வௌ்ளாளப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் 20 வருடங்களாக சேதமடைந்து கிடைக்கும் சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும், காயாம்பட்டியில் கலிங்கி பாலம் முதல் திருச்சி மாவட்ட எல்லை வரை சுமார் 350 மீட்டர் உள்ள சாலையை செப்பனிட்டு தர கோரியும், ஒலியமங்களம் பெரிய கண்மாய் பெரியமடையை கட்டி தர வேண்டியும்,சுந்தம்பட்டி முதல் வெள்ளாளப்பட்டி வரை உள்ள இணைப்பு சாலையை செப்பனிடக்கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (புதன்கிழமை) ஒலியமங்கலத்தில் சிவசுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சாந்தா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு தரப்பில் மண்டல துணை வட்டாட்சியர் திருப்பதிவெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், காரையூர் காவல் ஆய்வாளர், காரையூர் வருவாய் ஆய்வாளர், ஒலியமங்களம் கிராம நிர்வாக அலுவலர், சங்கத்தின் சார்பில் சிவசுப்பிரமணியன்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஒன்றிய செயலாளர் இராமசாமி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.
