முறையான சிகிச்சையின்றி கூலித் தொழிலாளி பலி தனியார் மருத்துவமனைக்கு சீல்: கலெக்டர் அதிரடி; திருநின்றவூரில் பரபரப்பு

ஆவடி: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, பஜ்ரங் கல்லூரி சாலையை சேர்ந்தவர் ராகவன் (56).  கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. ராகவன் விரை வீக்கம் பிரச்னையால் அவதிப்பட்டார். இதையடுத்து, கடந்த ஜூன் 6ம் தேதி திருநின்றவூர், சிடிஎச் சாலையில் உள்ள ஏஜி நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, அறுவை சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் கட்டணமாக கேட்டுள்ளனர். அதனை, ராகவனும் செலுத்தி விட்டார். பின்னர், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது, கூடுதலாக ரூ.23,500 செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

அதற்கு, தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ராகவனையும்,  அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி,  ஜாதி பெயரை சொல்லி கீழ்த்தரமாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ராகவனை டிஸ்சார்ஜ் செய்யாமல் மருத்துவமனையில் சிறை வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி, நாங்கள் கேட்ட பணத்தை செலுத்தாவிட்டால், உங்கள் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்வோம் என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, ராகவனின் மகனிடம் இருந்து பைக்கையும் பறித்து கொண்டு அனுப்பினர். இந்தவேளையில், ராகவனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகவன் கடந்த ஜூலை 27ம் தேதி இறந்தார். இதுகுறித்து நந்தினி, திருவள்ளூர் கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் புகார் அளித்தார். புகாரின்படி திருவள்ளூர் ஆர்டிஓ, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பைக்கை மீட்டு, ராகவன் மகனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகத்திடம், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கேட்டனர். அதற்கு, அவர்கள் பதிவு எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி பணத்தை செலுத்த வற்புறுத்தியும், இது போன்ற செயல்களில் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ராகவனுக்கு அறுவை சிகிச்சைக்கு பின் எவ்வித பரிசோதனையும் சொய்யாமல், அலட்சியமாக இருந்தது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜசுந்தரேஸ்வரி, நோயாளிக்கு முறையான டிஸ்சார்ஜ் விபரங்களை வழங்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின் மேற்கொள்ள வேண்டிய தொடர் பரிசோதனை செய்யவில்லை.

அவர்கள் கேட்ட தொகை செலுத்தாததால், ராகவனை விடுவிக்காமல், பைக்கை பறித்து கொண்டனர். பின்னர், காலதாமதமாக டிஸ்சார்ஜ் செய்தனர் என தெரிந்தது. இதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதைதொடர்ந்து, தவறான நடவடிக்கைகளில் செயல்பட்ட மருத்துவமனையை பூட்டி சீல் வைக்க கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று காலை திருவள்ளூர் ஆர்டிஓ பிரித்தி பார்கவி, ஆவடி தாசில்தார் செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த உள்நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து, தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், உயிரிழந்த ராகவனின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: