சந்தை என வரையறுக்கப்படாத இடங்களில் மொத்த வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சந்தை என்று வரையறுக்கப்படாத இடங்களில் மொத்த வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஜார்ஜ் டவுனில் மொத்த வியாபாரம் நடத்திவந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வர்த்தகம் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழ்நாடு சந்தைகள் ஒழுங்குமுறை சட்டம் 1995ல் இயற்றப்பட்டது. அதன்படி கோயம்பேடு சந்தையை மொத்த விற்பனை வளாகமாக அறிவித்து 1996ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பாரிமுனை அருகேயுள்ள பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளுக்கு சீல் வைத்து சி.எம்.டி.ஏ. உத்தரவிட்டது. இந்த  உத்தரவை  எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த தனி நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான மேல்முறையீடு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வுகள் விசாரித்தது. ஒரு அமர்வு பிறப்பித்த உத்தரவில் சீலை அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைத்தனர்.

ஆனால் மற்றொரு அமர்வு பிறப்பித்த உத்தரவில் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் இந்த வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்விற்கு பரிந்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு சந்தைகள் ஒருங்குமுறை சட்டத்தின்படி சந்தைகள் குழுவிற்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை தீர்மானித்து சந்தைக்குழு முடிவெடுக்க முடியுமா என்ற கேள்விகள் தொடர்பாக நீதிபதிகள் ஆர்.மகாதேவன், என்.ஷேஷசாயி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், தமிழ்நாடு சந்தை ஒழுங்குமுறை சட்டத்தில் சீல் வைக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி எந்த பிரிவுகளும் சட்டத்தில் இல்லை. இருந்தபோதிலும், சந்தை என வரையறுக்கப்படாத பகுதிகளில் மொத்த வியாபாரம் நடத்தப்படவில்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யவேண்டும் என்று விதிகளில்  கூறியிருப்பதால், விதிமீறி செயல்படும் வியாபாரிகளின் கடைகளை சீல் வைக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபாரிகள் செய்வது மொத்த வியாபாரமா அல்லது சில்லறை வியாபாரமா என முடிவெடுக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதே தவிர சந்தை குழுக்களுக்கு இல்லை என்று விளக்கம் அளித்து தீர்ப்பளித்தனர்.

Related Stories: