`தலைமுடியை வெட்டிவிட்டு பள்ளிக்கு வா’ என ஆசிரியர் திருப்பி அனுப்பியதால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை: அரும்பாக்கம் வினாயகபுரம் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார்(15). மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று வீட்டில் இருந்து மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றான். மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்த சஞ்சய் குமார் தனது அறைக்கு சென்றான். ஆனால் வெகு நேரமாக அறையில் இருந்து வெளியே சஞ்சய் குமார் வராததால் சந்தேகமடைந்த அவனது தந்தை மாதவன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, சஞ்சய் குமார் புடவையால் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலின்பேரில் சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சய் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சஞ்சய் குமார் அதிகளவில் தலையில் முடி வளர்த்து இருந்தான். அந்த முடியுடன் தான் பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் சஞ்சய் குமாரிடம், “தலை முடி அதிகளவில் இருக்கிறது. நீ தலைமுடியை வெட்டி கொண்டு பள்ளிக்கு வா” என்று கூறி மாணவனை வீட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் கூறியதால் மனமுடைந்த சஞ்சய் குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மாணவன் தற்கொலை குறித்து தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவனை திருப்பி அனுப்பிய ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், உடன் பள்ளியில் படிக்கும் அவனது நண்பர்கள், சஞ்சய் குமார் பள்ளியில் படிக்கும் சக மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாகவும், தனது காதலை மாணவி ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்க கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>