நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு இன்று 218 பள்ளிகள் திறப்பு

ஊட்டி,ஜன.19: நீலகிரி மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 218 பள்ளிகள் செயல்பட உள்ளது. இதற்காக பள்ளி வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இவை மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைகாட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்று வருகின்றனர். இம்மாத துவக்கத்தில்  பொங்கலுக்கு பிறகு பொதுத்தேர்வு எழுதும் 10,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி இன்று (19ம் தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ., ஆகிய 218 பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு 9 ஆயிரத்து 636, மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 8 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 034 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல உள்ளனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பல்வேறு பள்ளிகளிலும் நேற்று கிருமி நாசினிகள் கொண்டு வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டது. கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது. சில அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களில் ஏற்பாட்டில் முன்னெச்சரிக்கையாக ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories:

>