×

தோடர் பழங்குடியினரின் வளர்ப்பு எருமைகளுக்கான ‘உப்பட்டும்’ பாரம்பரிய விழா

ஊட்டி,ஜன.19: தோடர் பழங்குடியினர் வளர்ப்பு எருமைகளுக்கு உப்பு வழங்கும் ‘உப்பட்டும்’ பாரம்பரிய விழா ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தகர், காட்டு நாயக்கர், பனியர், இருளர் மற்றும் குறும்பர் போன்ற பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், வனங்களை ஒட்டியும், வனங்களுக்குள்ளும் வாழ்ந்த வருகின்றனர். நவீன உலகில் வாழ்ந்தாலும், அவர்கள் தங்களது பாரம்பரியங்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். ஆடைகள் முதல் பாரம்பரிய விழாக்கள் வரை அனைத்தையும் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள் பல்வேறு பாரம்பரிய விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தங்களது கோயில்களுக்கு கூரை மாற்றும் பொலிவெய்த் திருவிழா, புத்தாண்டை வரவேற்கும் ெமாட்பர்த் திருவிழா மற்றும் திருமணத்திற்கான வில் அம்பு வழங்கும் விழா ஆகியவை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான எருமைகளுக்கு உப்பு தண்ணீர் வழங்கும் விழா நடத்தி வருகின்றனர். ஆண்டு தோறும் நடத்தப்படும் இவ்விழா, ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக, அங்குள்ள மைதானத்தில் பள்ளம் தோண்டி அதில் நீரை நிரப்பினர். பின், உப்பை கொட்டப்பட்டது.  ஒவ்வொருவராக தாங்கள் வளர்க்கும் எருமைகளும் மற்றும் கோயில் எருமைகளை அழைத்து வந்து அந்த உப்பு நீரை குடிக்க வைத்தனர். பின், பழங்குடியின மக்கள் அந்த நீரை புனித நீராக கருதி அனைவரும் பருகினர். தொடர்ந்து, அங்குள்ள பாரம்பரிய ேகாயிலை சுற்றிலும் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினர். இவ்விழாவிற்கு, உப்பட்டும் விழா என தெரிவித்தனர். பழங்காலத்தில் மழை அதிகமாக பெய்யும் சமயங்களில் எருமைகளுக்கு நோய் தாக்காமல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவே உப்பு வழங்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக தாங்கள் பின்பற்றி வருவதாக தோடர் பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

Tags : festival ,Todar ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...