×

தீயணைப்புத்துறை டிஜிபி குன்னூரில் ஆய்வு

குன்னூர்,ஜன.19: தமிழக தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணித்துறை டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் நேற்றுஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்து பின்னர் குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு வருகை புரிந்தார். குன்னூர் பொறுப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள மீட்பு கருவிகளை ஆய்வு செய்தார்.அணிவகுத்து நின்ற தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்து அங்கு மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் விரைவாக  ஏறும்மாறு உத்தரவிட்டார். உடனடியாக தீயணைப்பு வீரர் கயிற்றின் உச்சி வரை சென்றார். வீரரின் திறமையை பார்த்து டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது: நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் காட்டு தீ ஏற்படும் வாய்ப்புஅதிகமாக உள்ளது. எனவே இது போன்ற காலங்களில் சுற்றுலா பயணிகள் மலையேற்றம் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் தீயணைப்பு துறையில்  காலியாக உள்ள இடங்களில் புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். குன்னூர் தீயணைப்பு நிலையம் உள்ள இடம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமானது என்பதால் அதனை காலி செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Inspection ,Fire Department DGP Coonoor ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...