×

பள்ளிகளில் பொறுப்பு அலுவலர் ஆய்வு

கோவை, ஜன. 19:  கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், கோவை, நீலகிரி மாவட்ட பொறுப்பு அலுவலர் நேற்று கோவையில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய மண்டல மற்றும் மாவட்ட வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கோவை மண்டல அலுவலராக எஸ்.எஸ்.ஏ. திட்ட இயக்குனர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களை கண்காணிக்கவுள்ளார். தவிர, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு பொறுப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் சேதுராமவர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று கோவை திருச்சி ரோட்டில் உள்ள புனித மேரிஸ், புனித ஜோசப், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்போது, கழிப்பிட வசதி, வகுப்பிற்கான கால அட்டவணை, சமூக இடைவெளி பின்பற்ற தேவையான நடவடிக்கை, தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்தார்.

மேலும், மாணவர்கள் பள்ளிகளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், முதன்மை கல்வி அலுவலர் உஷா, கோவை, பொள்ளாச்சி, எஸ்.எஸ்.குளம் மற்றும் பேரூர் கல்வி மாவட்ட அலுவலர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், பள்ளிகளில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனவும், அது தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அவர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

Tags : Officer Inspection ,Schools ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...