×

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிப்பு

ஈரோடு, ஜன. 19: ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையடுத்து வகுப்பறைகள் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இன்று முதல் (19ம் தேதி) 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 365 உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், 403 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என மொத்தம் 54 ஆயிரத்து 352 மாணவ, மாணவியர்கள் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வர உள்ளனர்.

இதையடுத்து நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டதோடு, வகுப்பறைகளும் தூய்மைப்படுத்தப்பட்டன. உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களை கொண்டு பள்ளி வளாகங்கள், கழிப்பறைகள், வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்கு தேவையான மாஸ்க்குகள், சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வகுப்பறைகளிலும் 25 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாட வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக இடைவெளி பின்பற்றப்படுகின்றதா என்பதை கண்காணித்தல், தெர்மல் ஸ்கேன் செய்தல், மாஸ்க் விநியோகத்தல், சத்து மாத்திரிரை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைள்  மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். பள்ளிகளை கண்காணிக்க மண்டல, மாவட்ட, ஒன்றிய அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags : Schools ,classrooms ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...