9ம் வகுப்பு மாணவர்களுக்கு 24ம் தேதி ஊரக திறனாய்வு தேர்வு

ஈரோடு, ஜன. 19: ஈரோடு மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் கிராமப்புறத்தில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களுக்காக ஊரக திறனாய்வு தேர்வினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றால், மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தி ஆகிய கல்வி மாவட்டங்களில் 13 மையங்களில் 1,338 மாணவ-மாணவிகள் தேர்வினை எழுத உள்ளனர். தேர்வில், மாநில அளவில் தேர்ச்சி பெறுபவர்களில் மாவட்டத்திற்கு தலா 250 பேரை தேர்வு செய்து கல்வி உதவி தொகை வழங்கப்படும் என பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: