கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஓராண்டாக வளர்ச்சிப்பணி நடக்கவில்லை ஒன்றிய கவுன்சிலர் குற்றச்சாட்டு

வருசநாடு, ஜன. 19: கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சந்திரா சந்தோசம் தலைமை வகித்தார். பி.டி.ஒ முத்துப்பாண்டி, திருப்பதிவாசன் முன்னிலை வகித்தனர். இதில் நடந்த விவாதம் வருமாறு: முருகன்: கடந்த ஓராண்டாக ஊராட்சி ஒன்றியத்தில், எவ்வித வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. இதனால் மக்களின் முக்கிய பிரச்னைகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை. பி.டி.ஒ., முத்துப்பாண்டி: கடந்த சில மாதங்களாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. சிலம்பரசன்: ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை சம்பந்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

ஸ்கைலாப்ராணி: மந்திச்சுனை கிராமத்தில் பல மாதங்களாக சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.பி.டி.ஒ. திருப்பதி வாசகன்: கழிவுநீர் சாக்கடை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்: மக்களின் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது’ என்றார். இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் 4 பேர், திமுக கவுன்சிலர் ஒருவர் பங்கேற்றனர்.

Related Stories: