மஞ்சளாறு அணையில் சமூக விரோதச் செயல்களை தடுக்க காவல்நிலையம் அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தேவதானப்பட்டி, ஜன. 19: சமூக விரோதச் செயல்களை தடுக்க, மஞ்சளாறு அணையில், காவல்நிலையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டியிலிருந்து 7 கி.மீ தொலைவில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மூலையாறு, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு, மஞ்சளாறு ஆகியவைகளுக்கு நடுவே மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை குறித்து வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகமாக தெரிவதில்லை. இதனால், உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமே வருகின்றனர். இங்குள்ள அணைப்பகுதியில் குளித்த சுற்றுலாப் பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து குறைவால் இப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடந்து வருகின்றன. மஞ்சளாறு ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மது அருந்துகின்றனர். குடிபோதையில் அணையில் குளிப்பதால், சில சமயங்களில் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர். கொடைக்கானல் சாலை டம்டம்பாறையில் இருந்து பார்த்தால் மஞ்சளாறு அணை குளம்போல் காட்சியளிக்கும். மலை அடிவாரம் என்பதால் மர்மநபர்கள் வனவிலங்குகளையும் வேட்டையாடுகின்றனர். எனவே, மஞ்சளாறு அணையில் அவுட் போலீஸ் ஸ்டேசன் அமைத்தால், சமூகவிரோதச் செயல்கள் தடுக்கப்படும். இது குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: