குடும்பநலம் தொடர்பான கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

சிவகங்கை, ஜன.19: சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் இந்திய மக்கள் தொகை ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை எஸ்ஆர்எம் பொது நலக்கல்வித்துறை இணைந்து நடத்துகின்ற 5வது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் தொடங்கியுள்ளது. தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, ஊட்டச்சத்து, ரத்தசோகை, கருவுறுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், சுகாதாரம் சார்ந்த திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்களை சேகரிப்பதே இக்கணக்கெடுப்பு பணியின் முக்கிய நோக்கம் ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தகவல்களை சேகரிப்பார்கள். இக்கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: