காரைக்குடியில் புதிய தார்ச்சாலைகள் மழைக்கு சேதம் பணிகள் தரமில்லை என குற்றச்சாட்டு

காரைக்குடி, ஜன.19: காரைக்குடி பகுதியில் போடப்பட்ட சில மாதங்களிலேயே சாலைகள் ஆங்காங்கே அரித்து பள்ளமாக மாறி உள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39 பகுதிகளில் ரூ.67 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழையில் போடப்பட்ட சில மாதங்களிலேயே சாலைகளில் அரிமானம் ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.  இதில் கண்டனூர் ரோடு, செக்காலை முதல் மற்றும் இரண்டாம் வீதி, 100 அடி ரோடு நகராட்சி அலுவலகம் அருகே உள்பட பல்வேறு பகுதியில் சிறிய மற்றும் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட துவங்கி உள்ளது. கண்டனூர் ரோடு உள்பட சில இடங்களில் பள்ளங்களில் கிரசர் மண் போட்டுள்ளனர். இதனால் தூசி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பேட்ஜ் ஒர்க் பார்க்காவிட்டால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு சாலை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மேலும் சாலை அமைக்க ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பணிகளையாவது அதிகாரிகள் கண்காணித்து முறையாக நடக்க செய்ய வேண்டும். போடப்பட்ட அனைத்து சாலைகளையும் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சமூகஆர்வலர் பிரகாஷ் கூறுகையில், சாலை பணிகள் முறையாக நடக்கவில்லை. சாலை அமைக்க தேவையான வெட்மிக்ஸ் மெக்டகம் மற்றும் தார் குறைவாக பயன்படுத்தினால்தான் இதுபோன்று பெயர்ந்து வரும். பல இடங்களில் பாதாளசாக்கடை திட்ட ஆள்நுழைவு தொட்டி உள்ள இடங்களில் சாலைகள் அமுங்கி போய் உள்ளது. முத்துராமலிங்க தேவர் நகரில் தற்போது போடப்பட்ட சாலையின் நடுவே இணைப்பு குழாய் பதிக்கப்பட்ட பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேதமாகும் நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 5க்கும் மேற்பட்ட சாலைகளில் இதுபோன்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. பலகோடி மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகள் சில மாதங்களிலேயே பள்ளமாக மாறி உள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.

Related Stories: