தொடர் மழையால் அழுகிய பயிர்கள் கண்ணீர் வடிக்கும் கடலை விவசாயிகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

கமுதி, ஜன.19: கமுதி அருகே வல்லந்தை, காக்காகுளம், போத்தநதி, மீட்டான்குளம், கல்லுபட்டி, நரியன், ஒத்தவீடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களில் கடலை மட்டும் 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். கடலை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தற்போது பெய்த தொடர் மழையால், வயலில் மழை நீர் தேங்கி செடிகள் முற்றிலுமாக அழுகிவிட்டன. செடிகளை பிடுங்கியவுடன் வேரோடு கடலை வரும். ஆனால் தற்போது வேர் அழுகியதால் வேரில் வராமல் பூமிக்கு அடியில் சிக்கியுள்ளன. இதனால் கடலைகளை தோண்டி எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், ‘‘உழவு, விதை, உரம், பூச்சி மருந்து அடித்த செலவு மற்றும் வேலைக்கு கூலி போன்றவை சேர்த்து ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நன்றாக விளைந்து இருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் தற்போது ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் கிடைப்பதே அரிது. தொடர் மழையால் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் பயிர்களிலேயே முளைத்த நிலையில், கடலையும் வீணாகி போனதால் விவசாயிகள் அதிகமன உளைச்சலில் உள்ளனர். அரசு கடலை விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே அடுத்து விவசாயத்தில் ஈடுபட முடியும்’’ என்றனர்.

Related Stories: