பயிர் பாதித்த விவசாயிகளுக்கு ₹30 ஆயிரம் வழங்க வேண்டும் ஏஐடியுசி வலியுறுத்தல்

பரமக்குடி, ஜன.19: தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி அழுகிய நெல், மிளகாய், சிறு தானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது. பரமக்குடியில் ஏஐடியுசி மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஜீவாவின் 58வது நினைவு நாளையொட்டி அவரின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் பேசினார். போக்குவரத்து கழக தலைவர் செல்வராஜ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ராமநாதபுரத்தில் விவசாய விரோத சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குடியரசு தினத்தன்று பரமக்குடியில் தேசிய கொடி ஏந்தி இரு சக்கர வாகன பேரணி நடைபெறும்.

மாவட்டத்தில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் மிளகாய், சிறு தானிய பயிர் வகைகள் தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்க அரசு முன் வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: