×

கடலாடி, முதுகுளத்தூரில் தொடர் மழையால் 50,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம் பேரிடர் கால இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி, ஜன.19: தொடர் மழைக்கு முதுகுளத்தூர், கடலாடியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. பேரிடர் கால இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் வட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர், கடலாடி வட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல்  பயிரிட்டனர். கடந்த நவம்பர் மாதம் முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இரண்டு புயலின் காரணமாக தொடர் மழை பெய்ததால் வயற்காடுகளில் மழைத் தண்ணீர் தேங்கியது. இதனால் களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளை விவசாயிகள் விறுவிறுப்பாக செய்து வந்தனர்.

இந்நிலையில் டிச.15ம் தேதி முதல் மீண்டும் பருவமழை துவங்கியது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது. முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல், பொசுக்குடி, பட்டி, புளியங்குடி, காக்கூர், வெங்கலகுறிச்சி, விளங்குளத்தூர், இளஞ்செம்பூர், கீழச்சாக்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிர்கள் கதிர்விட்டு  அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. பயிர்கள் நெற்கதிர்களுடன் சாய்ந்து கிடந்தன. இந்நிலையில்  தொடர் மழை காரணமாக நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகி நாசமானது. சில இடங்களில் பயிர்கள் மீண்டும் முளையிட்டு வருகிறது.

இதேபோன்று கடலாடி, மீனங்குடி, சாத்தங்குடி, வெள்ளாங்குளம், பள்ளனேந்தல், ஆப்பனூர், புனவாசல், ஓரிவயல், மாரந்தை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் கதிர்விடும் நிலையில் இருந்தன. தொடர்மழையால் வயற்காடுகளில் தண்ணீர் பெருகியதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. கதிர்விட்டிருந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் வேரோடு பிடுங்கி, கயிறு கட்டிலில் வைத்து, தண்ணீரை வடிகட்டி, சாலையோரத்தில் காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து  நெல் விவசாயிகள் கூறும்போது, ‘‘பருவமழையை எதிர்பார்த்து செப்டம்பர் மாதம் உழவார பணிகளை மேற்கொண்டோம். ஆனால் பருவமழை காலதாமதமாக பெய்தது. இதனால் இரண்டாவது முறையாக உழவார பணிகளை செய்தல், களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளுக்கு வீட்டிலிருந்த தங்க நகைகளை அடமானம் வைத்தும், வெளியில் வட்டிக்கு வாங்கியும் செலவு செய்து வந்தோம். கதிர்விட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. கதிர் அறுவடை செய்ய முடியாததால், கூலியாட்களை கொண்டு வேரோடு பிடிங்கி உலர வைத்து வருகிறோம். இதனால் மும்மடங்கு செலவு ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு அரசு பேரிடர் கால இழப்பீடு தொகை வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : paddy fields ,Mudukulathur ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை