10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை

மதுரை, ஜன.19:  மதுரை மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனைத்தொடர்ந்து 534 பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, சத்து மாத்திரைகள் உள்ளிட்டவைகளை தயார்படுத்தினர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பொங்கலுக்கு பின்னர் தமிழகத்தில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 534 உயர்நிலை மற்றும் மேல்நிலை ப்பள்ளிகளை மண்டல அலுவலர் ராமேஸ்வர முருகன் தலைமையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலையில் கல்விக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக மாவட்டம் முழுவதும் உள்ள 534 பள்ளிகளை பல்வேறு குழுவினர் ஆய்வு செய்தனர். பள்ளி வகுப்பு அறை மற்றும் வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10 முதல் 12ம் வகுப்பு வரை 35 சதவீதமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, அவை எவை? எவை? என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அனுப்பியுள்ளது.  அதனை முதன்மைக்கல்வி அலுவலர் பெற்று கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்தந்த பாடத்திட்டத்தின்படி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை தயார்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று வரும் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்க தயார்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.  

Related Stories: