×

மதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை

மதுரை, ஜன.19:  மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க, மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நேற்று பூமி பூஜை நடந்தது. மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்டது ஆனையூர். இப்பகுதியில் விடுதலை போராட்ட வீரர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள் சார்பில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் அடிப்படையில், திமுக சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது. இதற்கிடையே எட்டரை அடி உயரத்தில் வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் அனுமதி தர அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில், முத்தரையர் சமூகத்ைத சேர்ந்த கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, தனியார் இடத்தை விலைக்கு வாங்கி, அதில் சிலை அமைக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆனையூரில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டச்செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். இதில் ஆனையூர் கிராமத்தலைவர் ராமன், துணைத்தலைவர் ஞானமணி, கிராம நிர்வாகிகள் பெரியசாமி, கணேசன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் முத்தையன், வேட்டையன், பொம்மத்தேவன், சோமசுந்தரபாண்டியன், பாலசுப்பிரமணியன், பெரியசாமி, முத்தரையர் சமுதாயத்தினர் உள்பட திரளானோர் பங்கேற்றனர். பி.மூர்த்தி எம்எல்ஏ கூறுகையில், “இச்சிலை திறப்பு விழா, மிகப்பெரிய அளவில் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள முத்தரையர் சமுதாய மக்கள் அனைவரும் இச்சிலை அமைய வேண்டுமென மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை, நிறைவேற்றும் வகையில், சிலை திறப்பு விழா அமையும். இடையூறுகள் எத்தனை வந்தாலும், அதனையெல்லாம் தீர்த்து, முத்தரையர் சமுதாய மக்களின் ஆதரவுடன், சிலை திறப்பு விழா நடக்கும் என்பது உறுதி” என்றார்.

Tags : Bhoomi Puja ,Madurai ,Muttari ,
× RELATED நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில்...