×

சாணார்பட்டி ஒன்றியத்தில் மழையால் 100 ஏக்கர் நெல் நாசம் பயிர்கள் சாய்ந்து நெல்மணிகள் முளைத்தன

கோபால்பட்டி, ஜன. 19: சாணார்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் சாய்ந்து சேதமானது. சாணார்பட்டி பகுதியில் உள்ள புகையிலைப்பட்டி, மடூர், வீரசின்னம்பட்டி, ராகலாபுரம், தேத்தாம்பட்டி, வடக்காம்பட்டி, பாறைபட்டி, பண்ணபட்டி, பொம்மயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த புரட்டாசி மாத நெல் நடவு செய்தனர். இவைகள் வளர்ந்து தை மாத அறுவடைக்காக காத்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்துள்ளன. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செய்லவு செய்தால் ரூ.ஒன்றரை லட்சம் வரை கிடைக்கும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 100 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இயந்திரங்கள் மூலமே அறுவடை செய்ய முடியும். மாடுகளை கூட மேய்ச்சலுக்கு விட முடியாது என்கின்றனர். இதுவரை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்துறையினர் ஆய்வு செய்து, பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி அந்தோணி ராஜ் கூறுகையில், ‘சாணார்பட்டி ஒன்றியத்தில் போர்வெல் தண்ணீர் மூலம் நெல் நடவு செய்தோம். எந்த ஆண்டும் இல்லாதவாறு, இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் மழை பெய்து நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. நெல் மணிகள் முளைத்துக் கிடக்கின்றன. எனவே, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை