×

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜன. 19: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை சார்பில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர செயலாளர் நாயகம் தலைமை வகித்தார். தொழிலாளர் பேரவை மாநில தலைவர் பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் காளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது, ‘திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் 750 பேர் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 440 பேர் உள்ளனர். எனவே, தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிற்கொள்கை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். பணியிடை மரணம் அடைந்த வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். தூய்மைப் பணிக்கு பயன்படுத்தும் வாகனங்களை மாநகராட்சி நிதியில் மராமத்து பார்க்க வேண்டும். வாகன பராமரிப்பு கூடங்களை அமைக்க வேண்டும். குப்பைகளை கொட்ட குப்பைக் கூழங்கள் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நிரந்தர மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

Tags : Cleaning workers ,Dindigul ,
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...