பேராசிரியர் பணியிடம் நிரப்ப பல்கலை கழகங்கள் ஒரு அலகு கணக்கீட்டை பின்பற்ற வேண்டும்

திருச்சி, ஜன.19: பல்கலைக்கழகத்தை ஒரு அலகாக பின்பற்றி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கண்ணையன் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பேராசிரியர் பணியிடத்தை கணக்கிடும்போது பல்கலைக்கழகத்தை ஒரு அலகாக கணக்கிட வேண்டும். துறை ரீதியாக கணக்கிட்டால் ஒன்று அல்லது இரண்டு பணியிடத்துடன் நின்று விடும். அதற்காக பல்கலைகழகத்தில் உள்ள அனைத்துத்துறைகளையும் ஒரே அலகாக கணக்கிடும்போது 40 பணியிடங்கள் உருவாகும். அவ்வாறு 40 பணியிடங்கள் உருவாகும்போது, தமிழகத்தில் பின்பற்றக்கூடிய அரசாணை 55ன்படி அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு கட்டாயம் கிடைக்கும். அப்படி கிடைப்பது தான் சமூக நீதி. எனவே உயர்கல்வித்துறை செயலர் அனுப்பிய அறிக்கை அடிப்படையிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்பற்றும் வழிமுறைகளையும் பின்பற்றியும் அனைத்து பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகம் ஒரு அலகு என்ற அடிப்படையில் பேராசிரியர் பணியிடங்களை நியமிக்க வேண்டும். இப்போது உள்ள நிலை நீடித்தால் சமூக நீதி மறுக்கப்படும். அனைவருக்குமான சமூக நீதி கிடைக்காது. இவ்வாறு கண்ணையன் கூறினார். பேட்டியின்போது தலைவர் கதிரவன், மண்டல செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: