ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்க அரசு முடிவு

உடன்குடி,ஜன.19: ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி உள்ளிட்ட பனைபொருட்கள் விற்க முடிவு செய்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் காமராஜர் ஆதித்தனார் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.  காமராஜர் ஆதித்தனார் கழக தமிழக சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. மாநில பொதுச்செயலர் மின்னல் அந்தோணி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் யூஜின், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாநில ஒழுங்கு கமிட்டி தலைவர் வயோலா செல்வின் கலந்தது கொண்டு பேசினார். கூட்டத்தில் சடையநேரி கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் நாடார் மற்றும் பிற கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிக்கு ஆதித்தனார் பெயர் வைக்க வேண்டும், வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்து தொகுதி ஒதுக்கும் கூட்டணியில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநில பொருளாளரக பிரதீப் கண்ணன், தென்மண்டல அமைப்புச் செயலராக சிங்கைமுருகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலராக சிவக்குமார், பொருளாளராக சங்கர்கணேஷ், தூத்துக்குடி மாநகர செயலராக அஜந்த்ராஜா, தெற்கு மாவட்டஇளைஞரணி செயலராக முத்துலிங்கம், இணைசெயலராக எமர்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில செயலர்கள் பால்பாண்டியன், ஜெயசிங் உட்பட திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: