×

சேலத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி கலெக்டர், போலீஸ் கமிஷனர் பங்கேற்பு

சேலம், ஜன.19: சேலத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணியை கலெக்டர், போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் நேற்று (18ம் தேதி) முதல் வரும் பிப்ரவரி 17ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், அரசு போக்குவரத்துத்துறை சார்பில் முதல் நாளான நேற்று, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே பேரணியை கலெக்டர் ராமன், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வட்டார போக்குவரத்துத்துறை ஊழியர்களும், காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு ஓட்டுநர் பயிற்சி பள்ளி டிரைவர்களும் சென்றனர். இந்த பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நேரு கலையரங்களில் நிறைவடைந்தது. முன்னதாக கலெக்டர் அலுவலக ரவுண்டானா சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன், மாவட்ட கூடுதல் எஸ்பி அன்பு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராஜராஜன் (மேற்கு), ஜெயகவுரி (கிழக்கு), சரவணபவன் (தெற்கு), ரகுபதி (ஆத்தூர்), மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் சத்தியமூர்த்தி (போக்குவரத்து), மணிகண்டன், மற்றும் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை கர்லின்எபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Commissioner of Police ,Department of Transport ,Salem ,
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...