மாவட்டம் முழுவதும் 346 பள்ளிகள் இன்று திறப்பு தினமும் ஒரு மாத்திரை வழங்க அறிவுறுத்தல்

நாமக்கல், ஜன.19: நாமக்கல் மாவட்டத்தில், 346 பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகளுக்கு தினமும் ஒரு மாத்திரை வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாத இடைவெளிக்கு பிறகு இன்று 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 346 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிள் இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி, நேற்று அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுப்பிரமணியன் ஆகியோர் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறைகள் செயல்படவேண்டும் என அறிவுறுத்தினர்.  பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை சுத்தம் செய்து, அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் தினமும் ஒன்று வீதம் 10 நாட்களுக்கு மாணவ, மாணவியருக்கு வழங்கும் படி தலைமைஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதற்கான மாத்திரைகளும் அவர்களிடம் வழங்கப்பட்டது. இன்று பள்ளிக்குவரும், 45 ஆயிரம் மாணவ-மாணவியருக்கு வழங்குவதற்காக 9.52 லட்சம் சத்து மற்றும் ஜிங்க் மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்தார்.

Related Stories: