திருவாரூரில் பரபரப்பு மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலை மறியல்

திருவாரூர், ஜன.19: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் 400 பேர் கைது செய்யப்பட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை முழுமையாக பெற்று தரவேண்டும். விவசாயக் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திருவாரூர் அருகே மாவூர் கடைத்தெருவில் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், ஒன்றிய செயலாளர் இடும்பையன் மற்றும் சிஐடியூ மாவட்ட தலைவர் மாலதி உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் கொரடாச்சேரியில் கட்சியின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி உட்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் குடவாசலில் ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் கெரக்கோரியா உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 105 பெண்கள் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறுவடைக்கு தயாராக இருந்து நீரில் மூழ்கி அழுகிய நெற் பயிர்களுக்கு முழு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை அறிவிக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கதிரேசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல முத்துப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் அழுகிய நெற்பயிர்களுக்கு முழு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை அறிவிக்க கோரி முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. நீடாமங்கலம்: நீடாடங்கலம் பெரியார் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில்  சாலை மறியல் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மாவட்டகுழு கைலாசம், ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் பூசாந்திரம், அண்ணாதுரை, கென்னடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: