நெற் பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த விவசாயிகள்

திருவாரூர், ஜன.19: திருவாரூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் குவிந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக மாவட்டத்தில் பெய்த மழையினால் மேலும் ஒன்றரை லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக கதிர் வந்த நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கேட்டு விவசாயிகள், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பலரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். அதன்படி நன்னிலம் தாலுகா சேங்கனூர் கிராமம், குச்சிபாளையம் கிராமம் மற்றும் சேங்காலிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு குவிந்த நிலையில் பின்னர் அங்கு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு திரும்பினர்.

Related Stories: