×

விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அவசியம் சாலை பாதுகாப்பு விழாவில் கலெக்டர் பேச்சு

கிருஷ்ணகிரி, ஜன.19:  கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத்துறை சார்பில், 32வது சாலை பாதுகாப்பு மாத விழா துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் இன்று (18ம் தேதி) முதல் வருகிற பிப்ரவரி 17ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பு இழப்புகளால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில், அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018 முதல் 2020ம் ஆண்டு வரை சாலை விபத்து மற்றும் உயிர் சேதம் குறைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 1,805 சாலை விபத்துகளில் 410 நபர்களும், 2019ம் ஆண்டு 1,621 சாலை விபத்துகளில் 357 நபர்களும், 2020ம் ஆண்டு 1,272 சாலை விபத்துகளில் 305 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த 2019-ம் ஆண்டை விட சாலை விபத்துகள் 21.52 சதவீதம் குறைந்துள்ளதுடன், 14.56 சதவீதம் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கலெக்டர் தலைமையில், சாலை பாதுகாப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி சக்திவேல், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கிருஷ்ணகிரி வெங்கடேசன், ஓசூர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வாகன ஓட்டுனர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : district Collector ,road safety event ,speech ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...