காப்பீடு திட்டத்தில் ரூ.35 ஆயிரம் இழப்பீடு கோரி 22ம் தேதி கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் விவசாயிகள் சங்க கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

மன்னார்குடி, ஜன.19: சம்பா அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக பெற்றுத்தர வலியுறுத்தி வரும் 22ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளதாக பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், சம்பா அறுவடை துவங்க உள்ள நிலையில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வருவது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் பேரிடர் திட்டத்தின் மூலமாக இடுபொருள் இழப்பீடாக 100 சதவீதம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் பெற்றுத்தர தமிழக அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன் நிலுவை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை நிர்ணயம் செய்து நிபந்தனையின்றி அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதியன்று தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார்.

Related Stories: