அழுகிய நெற்பயிர்களோடு நிவாரணம் கேட்டு மா.கம்யூவினர் ஊர்வலம், காத்திருப்பு போராட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

திருத்துறைப்பூண்டி, ஜன.19: திருத்துறைப் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய, நகரம் சார்பில் தொடர் மழையில் அழுகிய நெற்பயிர்களுடன் ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகம் முன் நிவாரணம் கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு ஜோதிபாசு, மாவட்ட குழு சுப்பிரமணியன், சாமிநாதன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அழுகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னதாக வேதாரண்யம் சாலை அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் வந்தடைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து சமாதான கூட்டம் தாசில்தார் ஜெகதீசன் தலைமையில் வேளாண் துணை இயக்குனர் உத்திராபதி, உதவி இயக்குனர் சாமிநாதன், டிஎஸ்பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன் ஆகியோர் போராட்டதில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 30ம்தேதிக்குள் பயிர்களுக்கு முழு நிவாரணம், பயிர் காப்பீடு மற்றும் சேதமான வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து 2 மணி நேரம் நடந்த காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Related Stories: