மாவட்ட பஞ்.தலைவர் வேதனை

மன்னார்குடி, ஜன.19: மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யும் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து அழுகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு பாதிப்புக்குள்ளாகி உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வெட்டிக்காடு, பருத்திக் கோட்டை, அமரபாகம், பாமணி, கர்ணாவூர், வாஞ்சியூர், ஆளாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி சேதமடைந்த சம்பா பயிர்களை திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான தலையாமங்கலம் பாலு நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆறுகள், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாத காரணத்தினால்தான் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் நெற்பயிர்களை அழித்துவிட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடை செய்யும் தருணத்தில் மழைநீரால் சேதமடைந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலில் உள்ளனர். விவசாயிகள் கண்ணீர் விடுவது ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் நல்லதல்ல.

சேதமடைந்த வயல்களை இதுவரை அதிகாரிகள் சென்று பார்வையிடாதது சரியல்ல. பாரபட்சமாக எடுக்கப்பட்டுள்ள பயிர் காப்பீடு கணக்கெடுப்புகளை முழுமையாக ரத்து செய்து விட்டு புதிதாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். கனமழையால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஆய்வின்போது, மன்னை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மேலவாசல் தன்ராஜ், மாவட்ட பிரதிநிதி மகதை பாரதிமோகன், ஒன்றிய துணைச் செய லாளர் மூவை மகேந்திரன், விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் கோவி அன்பழகன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: