பொங்கல் விழாவையொட்டி அரூரில் முயல் விடும் நிகழ்ச்சி

அரூர், ஜன.19: பொங்கல் விழாவையொட்டி அரூர் அருகே குடுமியாம்பட்டி கிராமத்தில் முயல் விடும் நிகழ்ச்சி நடந்தது. அரூர் அருகே குடுமியாம்பட்டி கிராமத்தில், பொங்கல் விழாவை முன்னிட்டு, முயல் விடும் நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் அப்பகுதி இளைஞர்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின், கோயிலில் இருந்த வலைகளை எடுத்துக் கொண்டு வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு முயல் ஒன்றை பிடித்து வந்தனர். மாலை 5.30 மணிக்கு கோயில் அருகில் பெண்கள் பொங்கல் வைத்த பிறகு, சுவாமி ஊர்வலம் தொடங்கியது. அப்போது, காட்டிலிருந்து பிடித்து வந்த முயலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சுவாமியை சுற்றி 3 முறை வலம் வந்த பிறகு, சிறிது துாரம் சென்று முயலை விட்டனர். அது துள்ளி குதித்து வனப்பகுதியை நோக்கி தப்பி ஓடியது. இவ்விழாவில், அச்சல்வாடி, ஓடசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பொங்கல் முடிந்த 3வது நாள் முயல் விடும் நிகழ்ச்சி நடக்கும். ஊர்மக்கள் நலமாக இருக்க பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Related Stories:

>