நாகர்கோவிலில் நடுரோட்டில் பிச்சைக்காரர்கள் மோதல்

நாகர்கோவில், ஜன.19 : நாகர்கோவிலில் இரு பிச்சைக்காரர்கள் இடையே மோதல் சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நாகர்கோவிலில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் சாலைகளில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் தினமும் இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றன. கடை, கடையாக சென்றும், சிக்னல்களில் நின்றும் தர்மம் எடுப்பவர்கள் உண்டு. இவர்களில் சிலர், தர்மம் எடுத்த பணத்தில் மது அருந்துவதும் வழக்கமாகி உள்ளது. இவ்வாறு மதுபோதையில் இருக்கும் போது அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு நடக்கும் மோதல்கள் கொலையிலும் முடிகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் கடையில் தர்மம் எடுப்பது தொடர்பாக நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் ராமன்புதூர் பகுதியில் மது குடிப்பது தொடர்பாக இரு பிச்சைக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், மீனாட்சிபுரம் அம்மாசிமட தெருவில் நேற்று முன் தினம்  மதியம் இரு பிச்சைக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பீர் பாட்டிலால் குத்தியதில், ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக தற்போது கோட்டார் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நாகர்கோவிலில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆதரவற்ற நிலையில், சாலைகளில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பஸ் நிலையங்களிலும் இவர்கள் திரளாக அமர்ந்து இருக்கிறார்கள். நாகர்கோவிலில் இந்து கல்லூரி அருகே ஆதரவற்றவர்களுக்காக அபயகேந்திரம் செயல்படுகிறது. அங்கு தங்குமிடம், 3 வேளை இலவச உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இவர்கள் அங்கும் இருப்பதில்லை. சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமே முன் வந்து ஒரு நடவடிக்கை எடுத்தால் தான் தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் கூறினர்.

Related Stories:

>