அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

நாகர்கோவில், ஜன.19: குமரியில் மீண்டும் வெயில் கொளுத்தி வருகின்ற நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. நேற்று காலை வரை அதிகபட்சமாக கொட்டாரத்தில் 18.6 மி.மீ மழை பெய்திருந்தது. மயிலாடியில் 16.2, குளச்சலில் 3, மாம்பழத்துறையாறில் 3.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மழை குறைவு காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் 46.19 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 806 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 732 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையில் 72.14 அடியாக நீர்மட்டம் இருந்தது. 42.65 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பொய்கையில் 21.70 அடியாகவும், 54.12 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மாம்பழத்துறையாறு அணையில் 24.69 அடியாகவும் நீர்மட்டம் காணப்பட்டது. 25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட முக்கடல் அணை நீர்மட்டம் 18 அடியாகும். தலா 18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றார்-1ல் 11.35 அடியும், சிற்றார்-2ல் 11.44 அடியும் நீர்மட்டம் உள்ளது.

Related Stories:

>