தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு

தஞ்சை, ஜன.19: தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். தஞ்சை அருகே மாதாக்கோட்டையை சேர்ந்த கிராம மக்கள், இளையோர் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில், தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து நடத்தி வருகிறோம். இந்தாண்டும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுரைகளையும், நடைமுறைகளையும் முழுமையாக கடைபிடிப்போம் என உறுதி அளிக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் மாதாக்கோட்டையில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வரும் பிப்.21ம் தேதி அரசு விதிகளுக்குட்பட்டு எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: