×

கனமழையால் வைக்கோல் ஊறி வீணாகியது புதுகையில் கால்நடை தீவன பற்றாக்குறை அபாயம்

புதுக்கோட்டை, ஜன.19: மார்கழி மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக மழைநீரில் வைக்கோல் வீணாகிப்போனதால், கடும் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. நெற்பயிர் மனிதன் உயிர் வாழ்வதற்கு அரிசியையும், கால்நடைகள் குறிப்பாக மாடுகள் உயிர்வாழ வைக்கோல், தவிடு போன்றவற்றையும் தருகிறது. நெல் முற்றி கதிர் அறுவடை செய்து, நெற்கதிரிலிருந்து நெல்லை பிரித்து எடுத்தவுடன், மீதமுள்ள நெல்லின் தட்டைதான் வைக்கோல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் நெற்பயிரின் உபபொருளாக கிடைக்கும் வைக்கோலையே மாடுகளுக்கு முக்கிய தீவனமாக வழங்கி வருகின்றனர். குறைந்த விலையில் அல்லது விவசாயிகள் உற்பத்தி செய்யும் வைக்கோல்தான் மாடுகளின் பசியை ஆற்றும் முக்கிய தீவனமாக விளங்குகிறது. வைக்கோல் மாட்டுக்கு தீவனமாக பயன்படுவதோடு, காளான் வளர்ப்பிற்கும் பயன்படுகிறது. இதனால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அறந்தாங்கி பகுதிக்கு ஏராளமானவர்கள் வந்து வைக்கோலை வாங்கி செல்கின்றனர். விவசாயிகளும் தங்களின் தேவைக்கு வைத்துக்கொண்டு உபரியாக உள்ள வைக்கோலை விற்பனை செய்து விடுவர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்கழி மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக அறந்தாங்கி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் பகுதிகளில் மட்டும் காவிரிப்பாசனம் மற்றும் மானாவாரி பாசனப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கதிர அறுவடை செய்யும் தருவாயில் கீழே சாய்ந்து மழைநீரில் பல நாட்களாக மூழ்கி கிடந்தன. மழைநீரில் மூழ்கிய நெல் முளைவிட்டுள்ள நிலையில், நெற்பயிரின் தட்டையான வைக்கோல், தண்ணீரில் ஊறி அழுகியது. இதனால் இந்த ஆண்டு இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இருந்து மனிதர்களுக்கு அரிசியும், மாடுகளுக்கு வைக்கோலும் கிடைக்காது என்பது தெளிவாகி உள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் கூட்டமைப்பு துணைத் தலைவர் கண்டையன்கோட்டை கண்ணன் கூறியது: அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதியில் இந்த ஆண்டு மார்கழி மாதம் பெய்த வரலாறு காணாத தொடர் மழையின் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இவ்வாறு மூழ்கிய நெல்பயிரில் இருந்து நெல்மணிகள் முற்றிலும் முளைத்துவிட்டன. நெல்லின் தட்டையும் தண்ணீரில் ஊறிகூல்போல மாறிவிட்டன. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் கருகினாலும், அந்த நெல்பயிரின் தட்டையை (வைக்கோலை) மாடுகளுக்கு தீவனமாக வழங்கும் நிலை இருக்கும். ஆனால் இந்த தற்போது இயற்கை விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சித்தது போல மனிதர்களுக்கும், மாடுகளுக்கு உணவு இல்லாமல் செய்து விட்டது. இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு தாங்கள் உயிர்வாழ அரிசியையும், பாசத்துடன் வளர்த்துவரும் மாடுகளை காக்க வைக்கோலை விளைகொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விவசாயிகள் நிலை உணர்ந்து தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது