×

அறந்தாங்கி பகுதியில் மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் கேட்டு மறியல் எம்எல்ஏ தலைமையில் திரண்டனர்

அறந்தாங்கி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி, நெல்மணிகள் முளைத்துவிட்டது. மார்கழி மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் துயர் துடைக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மார்கழி மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி அறந்தாங்கி அடுத்த எரிச்சியில் ஆலங்குடி எம்எல்ஏவும், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான மெய்யநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மெய்யநாதன், அறந்தாங்கி ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின்லூதர்கிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலைமறியல் போராட்டத்தால் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : area ,Aranthangi ,rally ,MLA Mariyal ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு