திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம்: டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கு உள்ள குறைகள், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராயபுரம் எஸ்என்செட்டி தெருவில் உள்ள அறிவகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தனர். சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், மீனவர் சங்க நிர்வாகிகள் தங்களது தொகுதியில் உள்ள குறைகள், வளர்ச்சி குறித்து மனுக்களாக டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரிடம் வழங்கினர்.

  மேலும், ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளின் குறை மற்றும் வளர்ச்சி குறித்து திமுக நிர்வாகிகளுடன் கேட்டறிந்தனர். இதில், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் மருதுகணேஷ், ராயபுரம் பகுதி செயலாளர் சுரேஷ், செந்தில்குமார், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், சுந்தர்ராஜன், பெரம்பூர் பகுதி செயலாளர்கள் ஜெயராமன், முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், ெசன்னை வட கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். டி.ஆர்.பாலு எம்பி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து அனைவரிடமும் ஆலோசனை கேட்டார்.  இதில் எம்பிக்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர்கள் திமு தனியரசு, கே.பி.சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

Related Stories:

>