×

தன் மீது வழக்குகள் பாயும் அச்சத்தால் முதல்வர் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு

அரியலூர், ஜன.19: அரியலூர் மாவட்டம், அயன்சுத்தமல்லி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இச்சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார். இதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் தமிழக விவசாயிகள் டெல்லி செல்ல முடியவில்லை. குளிர் குறைந்த பின்னர் தமிழக விவசாயிகள் டெல்லிக்கு செல்ல உள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தால் விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறிய அய்யாக்கண்ணு, இச்சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் வழங்கும் விதைகளையே விவசாயிகள் பயிரிட முடியும். ஏற்கனவே இளம் வயதிலேயே பெண்கள் பருவம் எய்வதும், ஆண்களின் மலட்டுத்தன்மை அதிகரிப்பதற்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை வழங்குவதே காரணம். இந்த நிலை இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம் தொடர்கிறது.

தமிழக முதல்வர் தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும், மத்திய அரசை எதிர்த்தால் வழக்குகள் தொடரப்படும், வருமானவரி அதிகாரிகள் சோதனை தொடரும் என்பதால் அச்சப்பட்டு இச்சட்டத்திற்கு ஆதரவு தருவதாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழக முதல்வர் இச்சட்டங்களை படிக்க வேண்டும். வருங்கால சந்ததியினரை பாதுகாக்கவும், இச்சட்டத்திற்கு தமிழக முதல்வர் ஆதரவு தரக்கூடாது என்றார். மேலும் விரைவில் மத்திய அரசின் இச்சட்டங்களை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார். முன்னதாக கூட்டத்தில் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : Chief Minister ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...