அழுகிய பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 விவசாயிகள் கைது

காரைக்கால், ஜன.19: காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் அழுகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் நடப்பாண்டில் 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. நிவர் மற்றும் புரெவி புயலின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பயிர்களை விவசாயிகள் கடும் சிரமப்பட்டு காப்பாற்றி வளர்த்தனர். நெற் பயிர்கள் நன்கு வளர்ந்து அனைத்தும் கதிர்முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நெற்கதிர்கள் அனைத்தும் வயலிலேயே சாய்ந்து வீணானது. மழை நீரில் மூழ்கியிருந்த நெற்கதிர்கள் அனைத்தும் வயலிலேயே முளைத்து நாற்றானது. தற்போது இந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் வைக்கோலுக்கு கூட வழியில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட நெற்கதிர்களை கையில் ஏந்தி பேரணியாக வந்த விவசாயிகள் கடை தெருவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமீம்அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் வின்சென்ட் மற்றும் விவசாயிகள் 30க்கும் கலந்து கொண்டனர். இதனால் நாகை - காரைக்கால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் திருப்பட்டிமை போலீசார் கைது செய்தனர்.

நாகை, ஜன.19: நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் உரிய நிவாரணம் கோரி நாகை அருகே கூத்தூர் கிராம விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் அழுகி நாசமானது. நாகை அருகே கூத்தூர், பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகியது. இவ்வாறு பாதிப்படைந்த பயிர்களுக்கு இதுநாள் வரை உரிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், நிவாரணம் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய நெற்பயிரை காண்பித்து போராட்டம் நடத்தினர்.

Related Stories: